Jun 17, 2011

உறங்குநிலையில் உள்ள கரடியின் மர்மம்

ஐந்து கரடிகள் உறங்குநிலையைப் பற்றிய ஆராய்ச்சிக்காக ஈடுபடுத்தப்பட்டன. அவற்றின் குளிர்கால உறங்குநிலையின் போது நிகழும் மாற்றங்கள் துல்லியமாக அவதானிக்கப்பட்டன. இதன்போது ஆச்சரியம் மிக்க மாற்றங்கள் கரடியில் ஏற்படுவதை அலாஸ்கா மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்வாளர்கள் அவதானித்துள்ளனர். அமெரிக்கக் கறுப்புக் கரடிகளே (Ursus americanus) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

உறங்குநிலை உறங்குநிலை (hibernation – கைபேர்னேசன்) அல்லது பனிக்கால உறக்கம் அல்லது குளிர்கால உறங்குநிலை எனப்படுவது ஓர் உயிரினம் வாழ்வதற்குச் சாதகமான சூழ்நிலை இல்லாத காலங்களில் தனது செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டு நீண்ட உறக்கத்திலாழ்வதனைக் குறிக்கும். இதன்போது வளர்சிதைமாற்றங்கள் (அனுசேபம் –metabolism) குறைவடைந்தும் உடல்வெப்பநிலை, சுவாசவீதம், இதயத்துடிப்பு ஆகியன குறைவடைந்தும் காணப்படும். இவ்வகை விலங்குகள் குளிர்காலம் வரும் முன்னரே முடிந்த வரை அதிகம் உணவினை உண்டு உடல் எடையை அதிகரித்து கொள்ளும். இதனால் உடலில் கூடுதல் கொழுப்பு சேரும். இந்தக் கொழுப்பு நீள் உறக்கத்தின் போது உயிர் வாழ சக்தியை அளிக்கும். இந்த உறங்குநிலை நாட்கணக்கில், மாதக்கணக்கில் நிகழலாம்; இது இனத்தைப் பொறுத்தது.

ஆராய்வு

அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் குடிமனைகள் அருகாமையில் புகுந்து “தொந்தரவு” கொடுத்த கரடிகள் அவதானிப்புக்காகத் தயார்படுத்தப்பட்டன. இவற்றில் வெப்பநிலை, தசையின் செயற்பாடு, இதயத்துடிப்பு என்பவற்றை அளக்க ரேடியோ அலை பரப்பி பதிக்கப்பட்டது. கரடிகள் வாழ்வதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்க செயற்கையான வதிவிடம் உருவாக்கப்பட்டது, இங்கே அகச்சிவப்புக் கமராக்கள், ஒட்சிசன்- கரியமிலவாயு உணரிகள், அசைவு உணரிகள் என்பன வைக்கப்பட்டன.

குளிர்காலத்தின் போது, கரடிகள் நாளொன்றுக்கு சாராசரியாக ஒருதடவை உறக்கத்தில் இருந்து விழித்து, தம்மைச் சுத்தப்படுத்தி, வைக்கோற் படுக்கையைச் சரிசெய்துகொண்டன. உறக்கத்தின் போது குறட்டை விடுவதும் அவதானிக்கப்பட்டது.

அவற்றின் வெப்பநிலை 300 செல்சியசால் குறைந்தது, ஆனால் அவற்றின் ஒட்சிசன் தேவைப்பாடு, காபனீரொட்சைட் உருவாக்கம் ஆகியன வளர்சிதைமாற்றம் 25% ஆல் குறைந்துள்ளதை அறிந்துகொள்ள உதவியது.ஆச்சரியமிக்க அவதானிப்புகளில் ஒன்றாக கரடிகளின் இதயத்துடிப்பு விளங்கியது. உறங்குநிலையின் போது கரடிகள் ஆழ்ந்த உட்சுவாசமும் வெளிச்சுவாசமும் மேற்கொள்கின்றன, அப்படி நிகழும்போது அவற்றின் இதயம் முற்றிலும் நின்று விடுகின்றது, 10, 15, 20 செக்கன்களுக்கு எதுவித இதயத்துடிப்பும் நிகழவில்லை என இந்த ஆராய்வி முன்னெடுத்து நடத்திய பிரையன் பார்னசு தெரிவித்தார்.

அவை மூச்சை ஒருநிமிடத்துக்கு விடாமல் அடக்கி வைத்துக் கொள்கின்றன. அதன் பின்னர் சுவாசிக்கத் தொடங்கும் போது மீண்டும் இதயம் வேலை செய்யத்தொடங்குகின்றது.

வேறொரு ஆச்சரியம், உறங்குநிலையில் இருந்து எழும்பி அவற்றின் வெப்பநிலை சீராக 38 செல்சியசுக்குத் திரும்பியபின்னரும் அவற்றின் வளர்சிதைமாற்ற வீதம் குறைவாகவே, சாதாரண வளர்சிதைமாற்ற வீதத்தில் இருந்து அரைவாசியிலும் குறைவானதாகவே, நான்கு வாரங்களாகக் காணப்பட்டது.

இக்கரடிகளின் உடல் ஆரோக்கியம் எவ்விதத்திலும் குறையவில்லை; தசைகள் நலிவடையவில்லை. குறைவான வளர்சிதைமாற்ற வீதத்திலும் தங்களது வழமையான செயற்பாடுகளைச் செய்கின்றன, கரடிகளின் இந்த இரகசியத்தை மருத்துவத்தில் பயன்படுத்த முனையலாம் என்று பேராசிரியர் பார்னசு முன்மொழிந்தார்.

எம் உடலில் வளர்சிதைமாற்றத்தின் தேவை குறையும்படி செய்ய இயலுமானால் அது பெரியதொரு வரப்பிரசாதம் ஆகும்; சில நோய்களால் உடலில் ஒட்சிசனின் தேவையை நிறைவு செய்ய இயலாமல் உள்ளது; இந்த இரகசியத்தை மனிதன் பயன்படுத்தக்கூடியவாறு ஏற்படுத்தினால், அத்தகைய நோய்களான மார்படைப்போ அல்லது மூளைக் குருதிக் குழாய் அடைப்போ அல்லது பெரிய காயமோ ஏற்பட்டால் மூளைக்குத் தேவைப்படும் ஒட்சிசனின் அளவை ஈடுசெய்யப் பயன்படுத்தலாம்.
 

Related Posts

உறங்குநிலையில் உள்ள கரடியின் மர்மம்
4/ 5
Oleh